தமிழ்நாடு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி? முழு தகவல்கள்!

Published

on

குன்னூர் அருகே இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாகவும், அதில் இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்ததாகவும் தெரிகிறது. இன்று 11:47 சூலூரில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் மதியம் 12 மணிக்கு விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறங்க வேண்டிய இடமான வெலிங்டனில் இருந்து பத்து கிலோமீட்டருக்கு முன்னால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குன்னூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள அரசின் எஸ்டேட் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் விழுந்த உடனேயே யாரும் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் கூறியபோது விபத்து நடந்தபோது மிகப் பெரிய சத்தம் கேட்டதாகவும் ஒரு சிலர் அடர்ந்த காட்டுக்குள் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் பற்றி எரிந்து உள்ளதாகவும் தீயை அணைப்பதற்கு நீண்ட நேரமாகி உள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பயணம் செய்தவர்கள் யார் யார்? இதுவரை உயிர் இழந்தவர்கள் யார் யார்? என்பதை ராணுவ அதிகாரிகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டவர்கள் விரைந்து வர இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version