தமிழ்நாடு

திமுகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணியை முறிக்கிறதா காங்கிரஸ்; கமலுடன் காங்., நிர்வாகிகள் திடீர் ஆலோசனை!

Published

on

திமுகவுடன் இன்று கூட்டணி தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி இறுதி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இன்று காலை 10 மணி அளவில் தொகுதிப் பங்கீடு இறுதி முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த தொகுதிப் பங்கீடு காங்கிரஸ் கேட்டதை விட மிகக் குறைவானதாக இருப்பதாக அக்கட்சியினரே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். திமுக கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ்.அழகிரியும், அதிருப்தியில் தான் உள்ளாராம்.

அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவுடன் கூட்டணியில் இருப்பது அவசியம் என்பதையும் காங்கிரஸ் நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இன்று காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் அதிருப்தியில் இருக்கும் சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடனும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். தேர்தல் நெருங்கி வருவதால் கட்சித் தாவல் மற்றும் கூட்டணித் தாவல் நடந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

 

Trending

Exit mobile version