தமிழ்நாடு

கர்நாடகாவில் உள்ள அதிமுக கிளை தீர்மானம் நிறைவேற்றுமா? காங்கிரஸ் அதிரடி கேள்வி!

Published

on

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என கூறியதாக தெரிவித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று கூறியிருந்தார். சித்தராமையா முதல்வராக இருந்தபோது நாம் கோரிக்கை வைத்தும் தண்ணீர் திறந்துவிடவில்லை. நேரில் சந்திக்க வருகிறேன் என்று கூறியதற்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஆட்சிதான் நடக்கிறது. எனவே தயவு செய்து இங்கு எவ்வளவோ பேசுகிற நீங்கள், தண்ணீரை திறந்துவிட ஏற்பாடு செய்தால், காவிரி தண்ணீர் மேட்டூருக்கு வந்து, அதன் மூலம் வீராணத்துக்கு வந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார்.

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி அப்படி பேசியதற்கான ஆதாரத்தை கேட்டுள்ளார். மேலும், காவிரி பிரச்சினை 50 ஆண்டுகால பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஐம்பதிற்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, மத்திய அரசு தலையிட்டும் பிரச்சினை தீராமல் காவிரி மேலாண்மை வாரியம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

இப்பிரச்சினையில் கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிற எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடகாவில் உள்ள அதிமுக கிளை தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றுமா? என அதிரடி கேள்வி கேட்டுள்ளார். கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனுக்கு விரோதமாகத் தான் செயல்பட்டு வருகிறது. இதில் கட்சி எல்லைகளைக் கடந்து இப்பிரச்சினையை பார்க்கப்பட வேண்டுமே தவிர, பிரச்சினையை திசைத் திருப்புகிற முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடக் கூடாது என குற்றம் சாட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version