இந்தியா

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்திக்கு அழைப்பு: தம்பியின் பதவி அக்காவுக்கு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரியக்கமிட்டியை வலியுறுத்தினார்.

ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் ராகுல் காந்தி தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார். தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க மீண்டும் வலியுறுத்தினார். ராகுலை சமாதானப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதிய நபரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி ஏன் வரக்கூடாது என வெளிப்படையாக காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் பிரியங்கா காந்தி தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த, இளமைத் துடிப்புள்ள தொலைநோக்குப் பார்வையில் உள்ள தலைவரான பிரியங்கா காந்தி காங்கிரஸ் அரசு தலைமை ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒடிசாவைச் சேர்ந்த பக்தர் சரண்தாஸ் விஜயனும் பிரியங்கா காந்தி தலைவராக வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி தலைவர் இல்லை என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் பிரியங்கா காந்தியைத் தலைவராக வலியுறுத்துவதில் தவறு ஏதும் இல்லை. நேரு குடும்பம் என்ற பிராண்டை இந்திய அரசியலிலிருந்து நீக்கிவிட்டு மோடி பிராண்ட் என்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறது பாஜக. அதற்கு இடம் கொடுக்க முடியாது. ஏனெனில் மோடி பிராண்டை அகற்ற நேரு பிராண்டால்தான் முடியும். இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்களின் தலைமையில் காங்கிரஸ் வீறு கொண்டு எழுந்துள்ளது. அதேபோல இப்போது பிரியங்கா காந்தி தலைமையிலும் காங்கிரஸ் கட்சி வீறு நடை போட வாய்ப்பிருக்கிறது என்றார் பக்தர் சரந்தாஸ் விஜயன்.

seithichurul

Trending

Exit mobile version