தமிழ்நாடு

வைகோ ஒரு அரசியல் பச்சோந்தி: கடுமையாக வசைபாடிய காங்கிரஸ் தலைவர்!

Published

on

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவின் போது மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

காஷ்மீர் விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி காஷ்மீர் விவகாரத்தில் துரோகம் இழைத்ததாக காங்கிரஸை மிகக்கடுமையாக ஆவேசமாக விமர்சித்தார். இது நாடு முழுவதும் கவனிக்கப்பட்டது. ஊடகங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கே.எஸ்.அழகிரி வைகோவை கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்கிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகக் குற்றம் சாட்டி பேசினார். இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது.

நீண்டநெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துக்களை வெளிப்படுத்துவதை விட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும், பக்குவத்தையும் இழந்திருப்பதை காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும், காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. தெருமுனையில் மேடை போட்டு மைக்பிடித்து ஆவேசமாக கத்துவது போல, நாடாளுமன்றத்தில் கத்தி பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும், சாபம் தருவது போலவும் பேசுகிறார். அவர் பேசிய போது பிரதமர் மோடியே கை தட்டினாராம், ரசித்தாராம். வைகோ எதை எதிர்பார்த்தாரோ, அது நடந்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேச எடுத்துக் கொண்ட நேரத்தின் பெரும் பகுதியில் அவர் காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். என்னை பேச விடுங்கள். நான் காங்கிரசை தாக்கி பேச வேண்டுமென்று அவர் அனுமதி கேட்ட விதமும், அதை அமித்ஷா ஆமோதித்து அனுமதி வழங்க பரிந்துரை செய்ததும் மாநிலங்களவையில் நடந்திருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பாஜகவின் தலைவர்களை சந்திக்கிறார். அவர் பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம். துரோகம், துரோகம் என்று சொல்லும் வைகோ, எது துரோகம் என்று சொல்லாமல் தவிர்க்கக் கூடாது. திமுக.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும். அது அவருக்கு புரியவில்லை என்றால், அதை புரிய வைக்கிற ஆற்றல் தமிழக காங்கிரசுக்கு உண்டு.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் மதிமுக இருக்கிறது. மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கிற மதிமுகவின் பிரதிநிதி வைகோ காங்கிரசைப் பற்றி விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வைகோவுக்கு எதிரி பாஜகவா? காங்கிரசா ? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசையே விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் தொடருமேயானால் கடுமையான ஏவுகணைகளை காங்கிரஸ் கட்சியிலிருந்து வைகோ மீது ஏவி விடப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version