தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய தமிழக அரசு!

Published

on

அரியர் தேர்வில் மாணவர்கள் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பம் போல, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை அரசு செலுத்தும் என்ற அறிவிப்பால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வில் பாஸ் ஆன சில அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் தான் சீட் கிடைத்தது. தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர லட்சங்களில் பணம் செலவாகும். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைத்தால், அவர்களது கல்விக் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த கோரிக்கையைப் பார்த்த எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகள் சீட் கிடைத்தால் அந்த கட்டணம் முழுவதையும் திமுக செலுத்தும் என்று அறிவித்தார்.

ஸ்டாலின் அறிவித்த சில மணி நேரங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகள் சீட் கிடைத்தால் அதை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் தாமதமாக அறிவித்துள்ளார், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வின் போது ஏற்கனவே சில அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாது என்ற காரணத்திற்காக வெளியேறியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படி முதல்வரின் அறிவிப்புக்கு முன்பே மருத்துவக் கல்லூரி கலந்தாய்வில் பங்கேற்று, தனியார் கல்லூரி என்ற காரணத்துக்காக வெளியேறிய அரசுப் பள்ளி மாணவர்கள், இந்தாண்டே எங்களுக்கு மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை வழங்க வேண்டும், மீண்டும் எங்களைக் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending

Exit mobile version