தமிழ்நாடு

மோடியை திருடன் என்ற நடிகை மீது கோவையில் வழக்குப்பதிவு!

Published

on

பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடிகை ரம்யா துணிச்சலாக மோடியை திருடன் எனவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.

கன்னடா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்த ரம்யா என்னும் திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினராவார். இவர் கர்நாடகா மாண்டியா தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2014-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்று தற்போது காங்கிரஸின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையில் அவரே திருடன் என நெற்றியில் எழுதிக்கொள்வது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சையது ரிஸ்வான் என்ற வழக்கறிஞர் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தார்.

தேசத்துரோக வழக்கு பதிவு செய்தாலும் அசராமல் மீண்டும் மோடியை திருடன் என்று நடிகை ரம்யா குறிப்பிட்டார். மேலும் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், #ModiAmbaniRafaleBlockbuster #ThugsOfHindostanTrailer என்ற பாலிவுட் படத்தின் தலைப்பை ஹாஷ்டாகாகப் பதிவிட்டு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அவர், பகிர்ந்துள்ள படத்தில் ஆமிர் கான் துரோகம் என் இயல்பிலேயே உள்ளது என்று சொல்வதாக உள்ளது.

அதாவது ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்குத் துரோகம் செய்துவிட்டார் என்று பொருள்படும் படி உள்ளது. இது பாஜகவினரிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் நடிகை ரம்யா என்னும் திவ்யாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜகவை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் கோவை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version