விமர்சனம்

நிறைய காமெடி… இடை இடையே கருத்துக்கள்… கோமாளி என்ன சொல்கிறார்… #comali_review

Published

on

1999ல் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் சிக்கிய ரவி கோமாவில் செல்கிறார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து 2016ல் நினைவு திரும்பி மீண்டு வருகிறார். அதே 1999 ரவியாக. அதாவது 17 வயது ரவியாக. அந்த 16 வருஷத்துல இங்க ஐடி… செல்போன்… காசு… காதல்… ஊருன்னு எல்லா விதத்துலயும் ஏகப்பட்ட வளர்ச்சிகள். 16 ஆண்டு பின் தங்கிய ரவி இந்த வளர்ச்சியையும், மாற்றங்களையும் எப்படி எதிர்கொண்டார்… என்ன ஆனார் என்பதை கிச்சு…கிச்சு… முட்டி இடை இடையே மனிதம், சமூகம், அரசியல், காதல்னு எல்லா கருத்துகளையும் ஆங்கே ஆங்கே தேவைக்கு ஏற்ப சில இடங்களில் அதிகமாக குழைத்தும் சொல்லியிருக்கிறார் இந்த கோமாளி…

ரவியாக ஜெயம் ரவி. 16 ஆண்டுகளை இழந்துவிட்டோம், தன்னால் எந்த பயனும் இல்லை என்ற இயலாமையை காட்டும் போதும், அதே 17வயது பையனாக வெகுளியாக இருக்கும்போதும் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். பள்ளி கால ரவி கொஞ்சம் ஒட்டாமல் இருந்தாலும் வெகுளியான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சிறு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு இது ஒரு வெற்றி படம்.

ஜெயம் ரவியின் நண்பராக வரும் யோகி பாபுவின் காமெடிக்கு தியேட்டர்களில் பயங்கர ரெஸ்பான்ஸ். ஆனால், இன்னுமா பெண்களை மட்டம் செய்து காமெடி செய்ய வேண்டும். கொஞ்சம் இந்த டைப் காமெடிகளை மாற்றிக்கொள்ளலாமே பாஸ். ஆனால், என்ன கொடுமை என்றால் இந்த டைப் காமெடிக்கு பெண்களும் வரவேற்பு கொடுப்பதுதான். மற்றபடி யோகி பாபு இந்த படத்துக்கு ஒரு பெரிய பலமாகவே இருக்கிறார்.

வில்லனாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஆரம்பத்தில் செய்யும் ஒரு கொலையை தவிர வில்லனாக அவருக்கும் பெரிய அளவில் இதில் வேலை இல்லை என்றே சொல்லலாம்.

வழக்கமான தமிழ் சினிமா நாயகியாக காஜல், நாயகனின் சகோதரியாக ஆர்.ஜே.ஆனந்தி அவர்கள் வேலையை சரியாகவே செய்துள்ளனர். சின்ன வயது காதலியாக வரும் சம்யுக்தா ஹெக்டே தான் இந்தப்படத்தின் முக்கிய திருப்பத்திற்கே காரணம். இங்கிருந்துதான் கதை வேறு எங்கையோ நகர்ந்து செல்லும்.( என்ன எப்படி என்று தியேட்டரில் பார்த்துக்கோங்க) காதை பதம் பார்க்கும் ஹிப்ஆப் ஆதி நாட்கள் ஆக ஆக இன்னும் அதிகமாகவே காதுகளை பதம் பார்க்க தொடக்கிவிட்டார். பாடல்களும் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை.

இந்த படத்தின் பெரிய பலமே காமெடி தான். அதை ரவியும் யோகிபாபுமே தங்கள் தலைகளில் தூக்கி சுமக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். மேலே சொன்னதுபோல இரண்டாம் பாதி கதை வேறெங்கோ செல்கிறது. கொஞ்சம் இழுவையகாவே இருக்கிறது. பல காமெடிகள் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. ஆனால், அதையும் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதால் இந்த ட்ரென்டில் மாற்றம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது போல. இவை எல்லாவற்றையும் சேர்த்து 2016 சென்னை வெள்ளம், மனிதாபிமானம், சமூக வலைத்தளங்களில் மாட்டி அருகில் இருக்கும் மனிதர்களுடன் பேசாத மக்கள், குழந்தைகளுடன் பேசாமல் மொபைல் கொடுத்து தனிமைப்படுத்துவது, சமூகம் பழைய விளையாட்டு மரபுகளை எல்லாம் இழந்து தவிப்பது, நிலா சோறு, விவசாயம், மீத்தேன், இடை இடையே அரசியல் என அதிகமான கருத்துகளை சமூகத்திற்கு சொல்ல நினைத்த இயக்குநர் அதை கொஞ்சம் ஓவராகவே கொடுத்துள்ளார்.

இதெல்லாம் இப்போ பேஸ்புக் ட்விட்டரிலேயே கிடைக்கின்றன எனும் போது கூடுதல் சலிப்பாகவே இருக்கிறது. ஏம்பா இந்தக் கருத்தெல்லாம் தேவை தானே என சொல்பவர்கள் மட்டுமல்ல என்னடா ஓவரா போறாங்களே என நினைக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தையே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

கோமாளி நல்ல பொழுதுபோக்கு காமெடி படம்… சில கருத்துகளுடன் காசுக்கு பங்கம் இல்லாமல் இருக்கிறது… குழந்தைகள், குடும்பங்களை பெரிதாக கவர்ந்துள்ளது என்பது கடந்த ஒருவாரத்தில் 25 கோடி வசூல் செய்துள்ளது என்பதன்மூலமே தெரிகிறது. அப்போ இந்தக் கோமாளி வெற்றிப்படம் தானே…

எழுத்து: ச.அழகுசுப்பையா

seithichurul

Trending

Exit mobile version