இந்தியா

அமித் ஷா – ராஜ்நாத் சிங் இடையே அதிகார மோதல்: பதபதைக்கும் பாஜக வட்டாரம்!

Published

on

மோடி தலைமையிலான பாஜக தனது இரண்டாவது ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பிரதமர் மோடியின் நிழலாக கருதப்படும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான ராஜ்நாத் சிங் கொஞ்சம் கொஞ்சமாக அமித் ஷாவால் ஓரங்கட்டப்படுவதாக தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நேற்று காலை 6 மணி அளவில் பிரதமரால் கேபினட் குழுக்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் எட்டு கேபினட் குழுக்கள் இடம்பெற்றது. இந்த எட்டு குழுக்களிலும் உள்துறை அமைச்சரான அமித் ஷா இடம்பெற்றிருக்கிறார். ஆனால் மூத்த அமைச்சரான ராஜ்நாத் சிங் வெறும் இரண்டு குழுக்களில் மட்டும் இடம்பெற்றிருந்தார். அதில் ஒன்று அவர் பொறுப்பு வக்கிக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு. மற்றொன்று பொருளாதார விவகாரங்களுக்கான குழு.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் ராஜ்நாத் சிங் இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே டெல்லி அரசியலிலும், ராஜ்நாத் சிங் சார்ந்த உத்தரப்பிரதேச அரசியலிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மூத்த பாஜக தலைவரும், மூத்த அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை அமித் ஷா ஓரங்கட்டுவதாக பரவலாக பேசப்பட்டது.

பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பதவியேற்ற ராஜ்நாத் சிங் அமித் ஷா வருகையால் ஓரங்கட்டப்படுகிறார். அமித் ஷாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என சர்ச்சை தேசிய அரசியலில் தொற்றிக்கொண்டது. நிலைமை உக்கிரமாவதை உணர்ந்த பிரதமர் மோடி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று இரவு 10.19 மணிக்கு திருத்தி அமைக்கப்பட்ட கேபினட் குழுக்களுக்கான பட்டியலை வெளியிட்டார். அதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறு அமைச்சரவைக் குழுக்களில் இடம்பிடித்துள்ளார்.

ஆனால் அமித் ஷா எட்டு குழுக்களிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அமித் ஷா ராஜ்நாத் சிங் அதிகார மோதலுக்கு வைக்கப்பட்ட தற்காலிக முற்றுப்புள்ளியே, இந்த சர்ச்சை இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக எதிரொலிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version