கிரிக்கெட்

“ஆஸி.,யின் முதுகெலும்பை உடைத்தது எது?”- Test Series வெற்றிக்குப் பின் Dressing room-ல் ரவி சாஸ்திரி ஓப்பன் டாக்

Published

on

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த கடைசி போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. அனுபவமற்ற இளம் அணியை வைத்துக் கொண்டு வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக, டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பொறுத்த வரையில், இதுவே இந்தியா பெற்றதிலேயே, ‘தி பெஸ்ட் விக்டரி’ என்றும் புகழப்படுகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை இந்திய அணி, போராடி அடைந்தது. டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில், புஜாரா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அரைசதம் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகன் விருது ரிஷப் பன்ட்க்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மொத்த அணியையும் பாராட்டி உணர்ச்சிப் பொங்க பேசியுள்ளார். இது குறித்தான வீடியோ வெளியாகி படு வைரலாக மாறி வருகிறது.

காணொலியில் சாஸ்திரி, ‘முதல் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வியடைந்து, அதன் பின்னர் மீண்டு வந்து இப்படியான வெற்றியைப் பதிவு செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமல், ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துவது என்பது அசாத்தியமானது. இந்த தொடர் வெற்றிக்கு அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் காரணம். இதைப் போன்ற நாட்கள் வாழ்க்கையில் அடிக்கடி வராது. எனவே, இதை அனுபவியுங்கள். இந்த மகிழ்ச்சியை அநாயசமாக கடந்து விடாதீர்கள். நன்கு உணருங்கள்.

இந்த தொடரை அடுத்து புஜாரா, தி அல்டிமேட் வாரியர் என்று அறியப்படுவார். அவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மலை போல நின்றதை யாராலும் மறக்க முடியாது.

ஷ்ராதுல் தாக்கூர்… 4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நீ அடித்த அந்த அரை சதம், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சம்மட்டி அடி. உண்மையில் அது தான் அவர்களின் முதுகெலும்பை உடைத்த விஷயம். அதிலிருந்து அவர்களால் மீண்டு எழ முடியவில்லை.

பன்ட், நீ ஆடும் ஒவ்வொரு கணமும் பலருக்கு நெஞ்சு வலி கொடுத்துக் கொண்டிருந்தாய். ஆனால், உன் ஆட்டம் காலா காலத்துக்கும் நினைவு கூறப்படும். வெல் பிளேய்டு.

4வது போட்டியில் அறிமுகமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் நட்டு ஆகியோருக்கு எனது பாராட்டுகள். தங்கள் முழுத் திறனை வெளிக்காட்டி நீங்கள் ஆஸ்திரேலியாவை நோகடித்தீர்கள்’ என்று மெய் சிலிர்க்கும் வகையில் பேசியும், புகழ்ந்தும் தன் உரையை முடித்தார்.

Trending

Exit mobile version