தமிழ்நாடு

கடும் எதிர்ப்பு எதிரொலி: திண்டுக்கல் ஐ லியோனி பதவியேற்பு விழா திடீர் ரத்து!

Published

on

சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது. இதற்கான விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி அவர்களை நியமித்தார். இந்த நியமனத்திற்கு திமுக கூட்டணி தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்தாலும் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மாலை லியோனி பதவியேற்பு விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்னால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றுவிட்டு செல்ல லியோனி நினைத்ததாகவும் இதற்காக முதல்வரை தொடர்பு கொண்டபோது இப்போது பதவி ஏற்க வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று முதல்வர் தரப்பிலிருந்து கூறியதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் நேற்று மாலை நடைபெறவிருந்த லியோனி பதவி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக வேறு நபர் மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

முன்னதாக லியோனி நியமனம் குறித்து அன்புமணி கூறியதாவது: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதையே பிழைப்பாகக் கொண்ட ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதை விட, அப்பதவியை மோசமாக அவமதிக்க முடியாது! பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? திண்டுக்கல் லியோனி சிறந்த ஆசிரியராம். அவரது கடந்த கால பேச்சுகளைக் கேட்டவர்கள் எவரும் இதை நம்ப மாட்டார்கள். பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியிலிருந்து லியோனியை நீக்கி விட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல் நியமனம் குறித்து முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு, அரசியல், பொது அறிவு, சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்புத்தகங்களில் தரமான பாடங்களை வடிவமைக்கின்ற, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து இருப்பது இந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தக் கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துகளை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி’ என்று கூறியிருந்தார்.

Trending

Exit mobile version