தமிழ்நாடு

ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன், ஓபிஎஸ் பங்கேற்பு!

Published

on

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் எளிமையான விழாவில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். சற்றுமுன் அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி கவர்னர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் விழாவில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பாமக தலைவர் ஜிகே மண்கி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆகியோரும் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் இவர்கள் இருவரும் பதவியேற்பு விழா நடைபெறும் ஆளுநர் மாளிகைக்கு வந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் பிரமுகர்கள் கேஎஸ் அழகிரி தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஈஸ்வரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் பதவி ஏற்பு விழா நடைபெறும் ஆளுநர் மாளிகையில் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்று பதவி ஏற்க இருக்கும் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஆகியோர்களும் பதவி ஏற்பு விழா நடைபெறும் மாளிகையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகையில் இன்று முதல்வராக பதவியேற்றவுடன் அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு சென்று ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்ய உள்ளார். அதேபோல் மறைந்த திமுக நிர்வாகி சிட்டிபாபு அவர்களின் வீட்டிற்கும் ஸ்டாலின் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாள் அவர்களை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version