தமிழ்நாடு

சட்டசபையில் துரைமுருகனை கண்கலங்க வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published

on

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கண்கலங்க வைத்த நெகழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது.

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை தொடங்கிய நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது சட்டப்பேரவையில் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு அவர் புகழாரம் சூட்டினார். கருணாநிதி பக்கத்தில் மட்டுமன்றி அவரது மனதிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து இருப்பவர் துரைமுருகன் என்றும், அவர் அழ வைக்க நினைத்தால் அழ வைக்கவும், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சட்டசபையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன்விழா காணும் துரைமுருகனை முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் முக ஸ்டாலின் அவர்கள் துரைமுருகன் குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கும்போது துரைமுருகன் அவர்கள் நெகழ்ச்சியில் கண்கலங்கிய காட்சியையும் அங்கிருந்த எம்எல்ஏக்கள் காண முடிந்தது.

இந்த நிலையில் ’அனைவரிடத்திலும் பாசம் காட்ட கூறியவர் துரைமுருகன் என்றும் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார் என்றும் நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்றும் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விசுவாசமான தலைவர்கள் அரசியலில் அமைவது கடினம் என்றும் அப்படிப்பட்டவர் திமுகவுக்கு கிடைத்து இருக்கிறார் என்றும் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ’50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை உள்ளவர் துரைமுருகன் என்றும் தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாகவும் திமுக இருக்கிறது என்றும் இந்த இயக்கத்தின் வெற்றி மற்றும் வீழ்ச்சிகளில் பயணித்தவர் துரைமுருகன் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version