தமிழ்நாடு

’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’: கொடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்வர் பேசியது என்ன?

Published

on

கொடநாடு விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதன் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே, இங்கே எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌, எங்கப்பன்‌ குதிருக்குள்‌ இல்லை என்கிற அடிப்படையிலே பேசி, இங்கே ஒரு பிரச்சினையைக்‌ கிளப்பியிருக்கிறார்‌. அதற்கு பதில்‌ சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத்‌ தலைவர்‌ அவர்களே, எங்கப்பன்‌ குதிருக்குள்‌ இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்‌. கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப்‌ பொறுத்தமட்டிலே, தேர்தல்‌ காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான்‌ இப்போது இந்த அரசு நிறைவேற்றிக்‌ கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல. நள்ளிரவிலே நடைபெற்ற அந்தக்‌ கொள்ளைச்‌ சம்பவத்திலே, அடுத்தடுத்து நடைபெற்றிருக்கக்கூடிய மரணங்கள்‌, விபத்து மரணங்கள்‌ போன்றவை அப்போதே மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான்‌ அந்தக்‌ கொள்ளை, கொலை வழக்குகள்‌ விசாரிக்கப்பட்டு, உண்மைக்‌ குற்றவாளிகள்‌ சட்டத்தின்முன்பு நிறுத்தப்படுவார்கள்‌ என்று ஏற்கெனவே தேர்தல்‌ நேரத்திலே நாங்கள்‌ வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்‌.

அதனடிப்படையிலே, முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதி பெற்றுத்தான்‌ விசாரணை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. அரசியல்‌ நோக்கத்தோடு அல்ல; முறைப்படி நீதிமன்றத்திலே அனுமதியைப்‌ பெற்று, நீதிமன்றத்தினுடைய அனுமதியோடுதான்‌ இந்த விசாரணை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. ஆகவே, இதில்‌ அரசியல்‌ தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. அதிலே கிடைக்கக்கூடிய தகவலின்‌ அடிப்படையில்‌, நிச்சயமாக உண்மைக்‌ குற்றவாளிகள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும்‌ இதற்கு அச்சப்பட வேண்டிய பயமோ, அவசியமோ இல்லை.

இந்த அரசு நிச்சயமாக சட்டத்தின்‌ ஆட்சியை நடத்தும்‌. ஆகவே, கொடநாடு வழக்கிலே, நீதிமன்றத்தின்‌ அனுமதியோடு நடக்கும்‌ விசாரணைக்கு, “அரசியல்‌ நோக்கத்தோடு என்று ஒரு களங்கத்தைச்‌ சுமத்தியிருக்கிறார்கள்‌. அப்படியல்ல என்பதைத்‌ தெளிவுபடுத்துவதற்காகத்தான்‌, நான்‌ இந்த விளக்கத்தை இந்த அவையிலே நான்‌ எடுத்து வைத்திருக்கிறேன்‌.

நான்‌ தொடக்கத்திலேயே சொன்னேன்‌. அரசியல்‌ நோக்கத்தோடு, பழிவாங்குகிற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்‌; தேர்தல்‌ நேரத்திலே சொன்ன உறுதிமொழிகள்‌ என்னவாயிற்று? எதையும்‌ நிறைவேற்றவில்லை, நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து நீங்கள்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. அதிலே ஒன்றுதான்‌ இது. இன்னும்‌ பல விஷயங்கள்‌ இருக்கின்றன. எனவே,
நீதிமன்றத்தினுடைய உத்தரவின்‌ அடிப்படையில்தான்‌, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, தனிப்பட்ட முறையில்‌, அரசியல்‌ நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பதை நம்முடைய பாட்டாளி மக்கள்‌ கட்சியினுடைய தலைவர்‌, மதிப்பிற்குரிய மாண்புமிகு உறுப்பினர்‌ திரு. ஜி.கே. மணி அவர்களுக்கும்‌ நான்‌ இதை வலியுறுத்திக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டிட விரும்புகிறேன்‌.

பாரதீய ஜனதா கட்சியின்‌ தலைவர்‌ திரு. நயினார்‌ நாகேந்திரன்‌ அவர்கள்‌, இது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார்‌. மடியிலே கனமிருந்தால்தான்‌ வழியிலே பயம்‌ இருக்கும்‌. எனவே,
யாரும்‌ பயப்பட வேண்டியதில்லை; அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு முதல்வர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version