தமிழ்நாடு

தினமும் 3 வேளையும் அன்னதானம்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தின் இந்து அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக கோவில்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோயில் நிலங்களை மீட்பது, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது உள்ளிட்டவற்றை கூறலாம். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர், திருத்தணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களில் தினந்தோறும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி இன்று முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக வழங்கப்படும் என்றும் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்த பின்னரும் நேரடியாக உணவு வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என நம் முன்னோர்கள் கூறியிருந்த நிலையில் இப்போதைக்கு 3 கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் மேலும் சில கோவில்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் அந்த திட்டம் தற்போது விரிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version