தமிழ்நாடு

கையடக்க CPU கண்டுபிடித்த மாணவருக்கு தமிழக அரசு உதவி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்

Published

on

திருவாரூரைச் சேர்ந்த மாதவ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கையடக்க கம்ப்யூட்டர் CPU உருவாக்கியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் கையடக்க CPU உற்பத்தி செய்து ஆன்லைன் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் அரசு உதவி செய்தால் இதை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர் மாதவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரது உயர் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு உதவும் என்றும் அறிவித்துள்ளார்.

டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கும் மாணவர் மாதவ் நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (28.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமத்தைச்‌ சேர்ந்த செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்கள்‌ சந்தித்து, தான்‌ புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச்‌ செயலாக்கக்‌ கருவியைக்‌ (ப) காண்பித்து வாழ்த்து பெற்றார்‌.

திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமம்‌, கலைஞர்‌ நகரில்‌ வசித்து வரும்‌ திரு. சேதுராசன்‌ என்பவரின்‌ மகன்‌ செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌, ஒன்பதாம்‌ வகுப்பு பயின்று வருகிறார்‌. இவர்‌ கணினியில்‌ மிகுந்த ஆர்வம்‌ கொண்டு, கணினி மொழிகளை படித்துள்ளார்‌. இவர்‌ கொரோனா ஊரடங்கு காலத்தில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌ கையடக்க CPU கண்டுபிடித்து உள்ளதாகவும்‌, இதற்காக இரண்டு ஆண்டுகளாகக்‌ கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பதைக்‌ கேள்விப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌-யை நேரில்‌ அழைத்துப்‌ பாராட்டினார்‌. இக்கருவி அனைவரிடத்திலும்‌ சென்றடைய ஏதுவாக டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தினைத்‌ தொடங்கி, இணையதளம்‌ மூலமாக மிகவும்‌ குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்‌ என்ற தகவலைக்‌ கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அம்மாணவனை வாழ்த்தினார்‌.

செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்களின்‌ கண்டுபிடிப்பினைப்‌ பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும்‌, ஆராய்ச்சிக்கும்‌ தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும்‌ செய்யும்‌ என்று உறுதியளித்தார்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Trending

Exit mobile version