தமிழ்நாடு

அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகளுக்கு பின்னர் முதல்வரும் ஆளுநரும் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

Published

on

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார்.

முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சில தினங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் சூழல்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை தலைதூக்க ஆரம்பித்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குறிய அமைச்சர்களான வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர்.

இப்படி அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகளுக்கு பின்னர் நேற்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். இது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இந்த சந்திப்பில் சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரை கூட்டுவது, தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் முடியவுள்ளதால் புதியவர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் முதல்வர், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுப்பதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால், விரைவில் அவர்களை விடுதலை செய்வதில் முடிவெடுக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version