இந்தியா

லத்தி சார்ஜ், புகைக்குண்டு வீச்சு… டெல்லியில் ரத்தக்களறியாக மாறும் விவசாயிகளின் போராட்டக் களம் – பகீர் வீடியோஸ்!

Published

on

டெல்லியில், மத்திய அரசு போட்டிருக்கும் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, டெல்லி போலீஸ் தடியடி நடத்தியும், புகைக் குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டக் களம் ரத்தக்களறியாக மாறியுள்ளது. டெல்லியில் போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த தள்ளு முள்ளுவினால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்தான காணொலிக் காட்சிகள் வெளியாகி பார்ப்போரைப் பதைபதைக்க வைக்கிறது.

காணொலிக் காட்சிகளைப் பார்க்க:

மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல குடியரசு தினமான இன்று ‘டிராக்டர் பேரணி’ நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

பேரணிக்கு டெல்லி போலீஸிடம் அனுமதி கேட்டது விவசாயிகள் தரப்பு. முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸ், பின்னர் மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் ஒரு பாதையில் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று கூறி அனுமதி வழங்கியது. அதன்படி மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடன், இன்று மதியம் 12 மணிக்கு மேல் விவசாயிகளின் பேரணி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை முதலே டெல்லி எல்லைகளில் பெரும் அளவிலான விவசாயிகள் கூடத் தொடங்கினார்கள். அவர்கள் 12 மணி வரை பொறுத்திருக்காமல் 9 மணி அளவிலேயே பேரணியை ஆரம்பித்துள்ளனர். பேரணியைத் தடுக்க போலீஸ் தரப்பில் போடப்பட்டிருந்த தடைகளை தகர்த்தெறிந்து விவசாயிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விவசாயிகள் தரப்பு, ‘நாங்கள் அற வழியில், அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்த உள்ளோம். எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காது’ என்று உறுதி அளித்துள்ளனர்.

முன்னதாக விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ‘நாட்டின் குடியரசு தினத்தன்று பேரணி சென்றால், அது மொத்த நாட்டுக்கும் தலைக் குனிவாக முடியும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் முன்னர் மத்திய அரசு வாதிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version