இந்தியா

இந்தியப் பெருங்கடல் பகுதியை குறிவைக்கும் சீனா.. கடலுக்குள் இறக்கிய நவீன டிரோன்கள்.. வெளியான ரகசியம்!

china uses Underwater Drones in indian ocean for for naval intelligence purposes

Published

on

நியூ ஜெர்ஸி : சீனா ஸீ விங் கிளைடர் எனப்படும் நீருக்கடியில் பயன்படுத்தும் டிரோன்களை இந்திய பெருங்கடல் பகுதியில் களமிறக்கி கடற்படைகளுக்கு தேவையான உளவு தகவல்களுக்காக பயன்படுத்தி வந்ததாக பாதுகாப்பு ஆய்வாளர் எச்.ஐ. சுட்டன் தெரிவித்துள்ளார். இவ்வகை டிரோன்களை பல மாதங்கள் நீருக்கடியில் நிறுத்தி தகவல்களை சேகரிக்க முடியும்.

சீனா வளர்ந்து வரும் பல உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 100 ஆண்டுகளை நிறைவடைவதற்குள் அணைத்து வழிகளிலும் அமெரிக்காவிற்கு நிகராக மாற்றும் எல்லா வேலைகளிலும் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராணுவத்தில் நவீனங்களை உட்புகுத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவிற்கு நிகராக உளவு சேகரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட தொடங்கியுள்ளது. அதற்காக ஸீ விங் கிளைடர் எனப்படும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய ஒருவகை வாகனங்களை இந்திய பெருங்கடல் பகுதியில் 2019 ஆம் ஆண்டு டிசம்பரின் மத்தியில் களமிறக்கி இந்தாண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் 3,400 க்கு மேற்பட்ட தகவல் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து போர்ப்ஸ் பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் எச்.ஐ. சுட்டன் அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி இவ்வகை டிரோன்கள் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்பட்டவை போலவே இருக்கின்றன, அதில் ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பகுதியில் கடந்து செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை காரணம் கூறி சீனாவால் கைப்பற்றபட்டது என்றார். சீனா இப்போது இந்த வகையான நீருக்கடியில் பயன்படுத்தும் டிரோன்களை இந்தியப் பெருங்கடலில் பெருமளவில் பயன்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சேகரித்த அறிக்கையில் சுமார் 14 டிரோன்கள் களமிறக்கப்பட்டு அதில் 12 மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை கிளைடர்கள் வேகமானவையோ அல்லது சுறுசுறுப்பானவையோ கிடையாது, இருப்பினும் அவை தொலைதூர மிஷன்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் சுட்டன் கூறினார். இந்தியப் பெருங்கடலில் வைக்கப்பட்டுள்ள இந்த சீன கிளைடர்கள் கடல்சார் தரவுகளை சேகரிப்பதாகக் கூறப்படுகிறது, அவை ஆபத்தானவை கிடையாது என்றாலும் கடல் பகுதிகளில் உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்த படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சவால்களைக் குறிப்பிட்டு, பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இந்த மாத தொடக்கத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய தளங்களுக்கான ஒரு போட்டியை உலகம் கண்டுகொண்டு இருப்பதாக கூறினார். மேலும் வரவிருக்கும் காலங்களில் அதன் வேகத்தை அதிகரிக்க போகிறது என்றும் கூறினார். உலகளாவிய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் மூலோபாய போட்டிக்கு பிறகு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய இடங்கள் மற்றும் தளங்களுக்கான ஒரு போட்டியையும் நாங்கள் காண்கிறோம், வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றார். இராணுவத் துறையில், தொழில்நுட்பம் அழிவின் ஆதாரமாக இருக்கக்கூடாது, மாறாக ஒரு தடுப்பு கருவியாக செயல்பட வேண்டும்.

எனவே பாதுகாப்பிற்கான எங்கள் அணுகுமுறை ஒருதலைப்பட்சத்திலிருந்து பலதரப்பு முறைக்கு மாற வேண்டும், இது எதிர்காலத்தை பலப்படுத்துவதற்காக நட்பு நாடுகளுடன் பயிற்சி நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதையும் கட்டாயப்படுத்துகிறது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில், நம்முடைய பாதுகாப்பு படைகளின் திறன் மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட நீண்டகால திட்டமிடல் நமக்கு தேவை என்றும் பிபின் ராவத் கூறினார்.

கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியா சீனா எல்லை பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தவிர்க்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்த பலனும் இல்லை. சில முறை முடிவுகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் சீனா தன்னுடைய படைகளை பின்வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் இந்திய பெருங்கடல் பகுதிக்குள்ளும் சீனா உளவு வேளையில் ஈடுபட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தென்சீன கடல் பிரச்சனையில் பெரும்பாலான பகுதிகள் தனக்கு சொந்தம் என பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியையும் குறிவைக்க தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version