சினிமா செய்திகள்

ஆடம்பர செலவை குறைக்க சேரன் அட்வைஸ் – திருமணம் விமர்சனம்!

Published

on

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ஒரு புரட்சி படமாக சிடியில் விடுகிறேன் என வெளியிட்ட இயக்குநர் சேரன், அதன் பின்னர், தமிழ் சினிமாவில் அடுத்ததாக படம் எடுக்கக்கூட முடியாமல் சிறிது காலம் காணாமல் போய்விட்டார்.

இந்நிலையில், கம்மி பட்ஜெட்டில் திருமணம் சில திருத்தங்களுடன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

திருமணம் என்பது தேவை தான். ஆனால், அதற்காக தற்போது செய்யும் ஆடம்பர செலவுகள் தேவையற்றவை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த படத்தை எடுத்துள்ளார். செத்தவன் காதில் ஊதும் சங்கு போன்று தான் இந்த கதை. சேரன் என்ன தான் எடுத்து சொன்னாலும், திருமணத்தை ஆடம்பரமாக செய்து பழகிவிட்ட இந்த சமூகம் இவரது பேச்சை சற்றும் கேட்கப் போவதில்லை என்பது தான் நிதர்சனம்.

சரி கதைக்குள் போவோம்..

ஒரு நேர்மையான மிடில் கிளாஸ் அரசு அதிகாரியாக வரும் சேரன், தனது தங்கை காவ்யா சுரேஷை கட்டிக் கொடுக்க பாடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், FMல் வேலை பார்க்கும் பெரிய இடத்துப் பையன் உமாபதிக்கும் காவ்யாவிற்கும் காதல் மலர்கிறது.

உமாபதியின் அக்காவாக சுகன்யா கெத்து காட்டுகிறார். இரு வீட்டிலும், திருமணத்திற்காக பேசி முடித்த பிறகு, மாப்பிள்ளையை சோதனையிட அண்ணன் சேரன் செய்யும் சேட்டைகள், பெண்ணை வேவு பார்க்க சுகன்யா, அவரது அலுவலகத்துக்கே வரும் அட்ராசிட்டிகள் என முதல் பாதி நகர்கிறது.

பின்னர், இரண்டாம் பாதியில், திருமண மண்டபத்துக்கு ஏன் இவ்வளவு செலவு? இத்தனை வகை உணவுகளை யார் சாப்பிட போகின்றனர் என ஒவ்வொன்றிலும், செய்யப்படும் ஆடம்பர செலவுகளை சுட்டிக் காட்டி சுகன்யாவுடன் தர்க்க போர் செய்யும் சேரன், அடிக்கடி சமுத்திரகனியாக மாறி அட்வைசும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்.

பெண் வீட்டுக்காரர்கள் படும் துயரத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் அலட்சியம் செய்வதை வெட்ட வெளிச்சமாக காட்டும் இடங்களில் பாராட்டுக்களை அள்ளினாலும், திருமணத்தை நடத்த வேண்டிய நேரத்தில் தேவையற்ற பஞ்சாயத்துக்கள் எப்படி செய்ய முடியும் என்று படத்திற்கு பெண் வீட்டுக் காரர்கள் மனதளவில் மட்டுமே சப்போர்ட் செய்யும் அளவிற்கே படம் வெளிவந்துள்ளது.

லோ பட்ஜெட் படம் என்பதால், ஒரு சீரியல் பார்த்த ஃபீலிங். அதிலும், கொஞ்சம் பழைய சீரியல் என்று தான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம், யூடியூப் வீடியோக்களும், சீரியல்களும் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பக்காவாக காட்சியளிக்கின்றன.

சேரனின் குடும்ப கதையை ரசித்து பார்த்தவர்களுக்கும் திருமணத்தை செய்ய போராடும் பெண் வீட்டாருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் பார்த்து திருந்த வேண்டும் என சேரன் எடுத்திருக்கும் இந்த திருமணத்தின் நோக்கம் வெற்றி அடையுமா? என்றால் அது ரொம்ப கஷ்டந்தான்.

சினி ரேட்டிங்: 2.25/5.

Trending

Exit mobile version