தமிழ்நாடு

சென்னை-மதுரை விமானக்கட்டணம்: ரூ.3800ல் இருந்து ரூ.10,000 என உயர்ந்ததால் அதிர்ச்சி!

Published

on

ரூபாய் 3800 என இருந்த விமான கட்டணம் திடீரென 10 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தென்மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் என்பதும் ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் தற்போது விமானத்தில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூபாய் 3800 என இருந்த கட்டணம் திடீர் என தற்போது 10 ஆயிரம் என அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறு விமானங்கள் தினந்தோறும் இயங்குகின்றன. இந்த விமானங்களிலும் குறைந்த அளவு இருக்கைகளே இருப்பதாகவும் இதனால் முன்பதிவு செய்ய பயணிகள் முண்டி அடித்து வருவதால் விமான கட்டணங்கள் உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது விமானத்தில் பல அடுக்கு கட்டணங்கள் இருப்பதாகவும், அதில் குறைந்த மற்றும் நடுத்தர கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டதால் தற்போது அதிக கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் மட்டுமே இருப்பதாகவும் இது வழக்கமான நடைமுறை என்றும் அறிவித்துள்ளனர்.

அதிக கட்டணம் கொண்ட இருக்கைகளுக்கு சென்னையிலிருந்து மதுரை செல்ல ரூபாய் பத்தாயிரம் எனவும் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 11,000 எனவும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல 10,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இது வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகள் தான் திடீரென இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி வரும் நிலையில் தற்போது விமான கட்டணமும் உயர்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version