தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு மிக கனமழை என எச்சரிக்கை

Published

on

தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதுகுறித்து வானிலை ஆய்வு இயக்குனர் மேலும் கூறியபோது, ‘தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை ஒட்டி நிலவக் கூடும். இதன் காரணமாக அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்’ என்று கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version