தமிழ்நாடு

முதல்வருக்காக நீதிபதியின் காரை நிறுத்தி காவல்துறை: கடும் கண்டனம்

Published

on

முதல்வருக்காக நீதிபதியின் காரை நிறுத்திய காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று இன்றைய தினம் நடந்தது. இதனையடுத்து முதலமைச்சர் வரும் போது சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை காவல்துறையினர் நிறுத்தி வைத்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால் பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், மிகுந்த சிரமப்பட்டனர். இந்த நிலையில் அதே சாலை வழியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் வாகனமும் வந்ததை அடுத்து அவருடைய காரையும் முதல்வரின் வருகைக்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சுமார் 25 நிமிடம் இதனால் நீதிபதி உயர்நீதிமன்றத்துக்கு வருவதற்கு தாமதமானது.

இந்த தாமதம் காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, உள்துறைச் செயலாளர் இதுகுறித்து ஆஜராகி உடனடியாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். அதன்படி காணொலி காட்சி மூலம் ஆஜரான உள்துறை செயலாளரிடம் ’எந்த அடிப்படையில் 25 நிமிடங்கள் பொது மக்களை தடுத்து நிறுத்தினார்கள் என்றும் பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி விட்டார்.

இதனை அடுத்து நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறைச் செயலாளர் இனிமேல் இதுபோன்ற நிகழ்வு நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அழைத்து விளக்கம் கேட்டு உள்ளதாகவும் உறுதி அளித்தார்.

இதனை அடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்துவார்களா? என்ற கேள்விக்கு எழுப்பியதோடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் எதிர்காலத்திலாவது இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

முதல்வரின் நிகழ்ச்சி காரணமாக உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் தடுத்து நிறுத்தப்பட்ட இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version