தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்: வணிகர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Published

on

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்து இருந்தால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக 2019ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது தெரிந்ததே. தமிழக அரசு தடை விதித்தாலும் சில வணிகர்கள் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால் 2020 ஆம் ஆண்டு திடீரென கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த குழுவில் உள்ள பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு தங்குதடையின்றி இருந்தது. இந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து மீண்டும் அந்த குழு செயல்பட தொடங்கியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி திடீரென சென்னையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது 2773 கடைகளில் 1390 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 13 லட்சத்திற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டது என்பதும் ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கூறிய போது சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் பணியில் பணியை தீவிரப்படுத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தங்களது கடைகள் இருக்குமானால் பத்து நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என்று வணிகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் மற்றும் தொழில் உரிமம் ரத்து உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை, அலுமினியத்தால் காகிதச் சுருள், தாமரை இலை, மூங்கிலால் ஆன பொருட்கள், துணி, காகிதம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version