தமிழ்நாடு

சென்னை – கோவை வந்தே பாரத் இரயில்: முன்பதிவு தொடங்கியது!

Published

on

கோவை – சென்னை இடையே நாளை மறுநாள் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பயணிகள் முன்பதிவு தொடங்கி உள்ளது.

வந்தே பாரத் இரயில்

சென்னை – கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ இரயில் சேவையை நாளை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரலில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இது என்பதே குறிப்பிடத்தக்கது. இதன்படி, வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து, வாரத்தின் மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் இரயில் இயக்கப்படும்.

இரயில் இயக்கப்படும் நேரம்

இந்த இரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு நின்று, காலை 6.37 மணிக்கு புறப்படும். அதன் பின்னர் ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு வந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை இரயில் நிலையத்தை வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து, மாலை 5.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதன் பின்னர், ஈரோட்டிற்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். அடுத்ததாக திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்து, இரவு 7.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

முன்பதிவு

வந்தே பாரத் இரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி AC Chair Car வகுப்பில், சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ரூ.1,215 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. AC Executive Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ரூ.2,310 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலியாக இருக்கும் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version