தமிழ்நாடு

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

Published

on

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என மூன்று பேர் நீட் தேர்வு எழுதியவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஞாயிறு அன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் பெரும் அச்சத்துடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகிய 2 மாணவிகள் அடுத்தடுத்து நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த மூன்று தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு மாணவச் செல்வங்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தை திமுக அரசு தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது என்பதும், நேற்று கவுன்சிலிங்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை எழுதிய செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த மாணவி அனுசியா தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவி அனுசியா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version