தமிழ்நாடு

ரூ.300 கோடி நஷ்டம்: அம்மா உணவகங்களில் சப்பாத்தி நிறுத்தம்!

Published

on

அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இரவில் வழங்கப்படும் சப்பாத்திக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஏழை எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த அம்மா உணவகத்தில் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் இரவில் சப்பாத்தி ஆகியவை மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரவில் சப்பாத்தி வழங்கப்படுவதால் வயதான சர்க்கரை நோயாளிகள் சப்பாத்திகளை சாப்பிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில் தற்போது பெரும்பாலான அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் இட்லி மற்றும் தக்காளி சாதம் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அம்மா உணவக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அம்மா உணவகத்திற்கு வரும் கோதுமை நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே கோதுமை சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு பல துறைகளுக்கு பல கோடிகள் ஒதுக்கி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் வயிறார சாப்பிட்டு வரும் உணவகமான அம்மா உணவகத்திற்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து, தொடர்ச்சியாக சப்பாத்திகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை திமுக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version