தமிழ்நாடு

மீண்டும் இரவு நேர ஊரடங்கு? மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது 13 மாநிலங்களில் 202 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை அடுத்து இதற்கு மேலும் ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பாக கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்றும், மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாநில அரசுகளும் தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ் வசதிகள், ஆக்சிஜன் உபகரணங்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்றும், ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதாலும் அதிக உயிர்களை பலியாக்கும் என்பதாலும் அனைத்து மாநில அரசுகளும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் கடிதத்தின்படி மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற அச்சம் தற்போது பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version