தமிழ்நாடு

டிராக்டரில் வந்து காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கிய பழனிசாமி!

Published

on

தமிழகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு டிராக்டரில் பவனி வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.

6,941 கோடி ரூபாய் செலவில் இந்த நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் திட்டம் மூலம் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் அதிகமாகி, நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதேபோல 18,566 ஹெக்டர் நிலங்கள் இந்தத் திட்டம் மூலம் பாசன வசதி பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகளை இணைக்கப் போவதாகவும் அதற்கு பழனிசாமி அடிக்கல் நாட்டப் போவதாகவும் அதிமுக அரசு விளம்பரம் செய்கிறது.

ஏற்கனவே திமுக அரசால், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 25.6.2008 ஆம் நாள் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை பழனிசாமி இப்போது புதிய திட்டம் போல பச்சை பெயிண்ட் அடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
29.5.2007 ஆம் நாள் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசும் போது, ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்துக்குள் உள்ள நதிகளை இணைக்கும் போது அதற்கான நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை அந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டு, அப்படி திட்டங்கள் தீட்டப்பட்டால் மத்திய அரசு நிதி வழங்கும் என்று தீர்மானம் போடப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். 22.2.2008 ஆம் நாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் அவர்கள் பதில் அனுப்பினார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்று அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள். 20.3.2008 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள்,
”வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவிரி – அக்னியாறு – கோரையாறு – பாம்பாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” – என்று அறிவித்தார்.

முதல் கட்டமாக 165 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். திட்டப் பணிகளை திருச்சியில் வைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் கலைஞர். அடுத்து வந்த அதிமுக ஆட்சி ஒவ்வொரு முறையும் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் என்று சொல்லுமே தவிர பத்தாண்டு காலமாக எதுவும் செய்யவில்லை..கடந்த பட்ஜெட்டில் 700 கோடி ரூபாயை ஒதுக்கினார்களே! என்ன செய்தார்கள்? எதுவும் இல்லை’ என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version