தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதை எதிர்த்து பொதுநலமனு: நாளை திட்டமிட்டபடி வகுப்புகள் நடக்குமா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை பள்ளிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென மதுரை ஐகோர்ட்டில் பள்ளிகள் திறப்பதை எதிர்த்து வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் ’கொரோனா தடுப்பூசி 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இன்னும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தடுப்பூசி செலுத்தப்படாமல் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது நோய் தொற்றை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.

மேலும் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதால் ஒரே வகுப்பு மாணவர்களுக்கு இடையே கற்றலில் வேறுபாடுகள் எழுவது அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஒரே பாடத்தை இரண்டு முறை நடத்த வேண்டிய கூடுதல் சுமையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இந்த பொதுநலமனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version