உலகம்

அமெரிக்கா கற்று தந்த பாடம்..வலதுசாரி அமைப்புகளுக்கு கடும் கட்டுப்பாடு.. கனடா அதிரடி நடவடிக்கை!

Published

on

கடந்த மாதம் அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்திற்குள் நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கனடா நாட்டின் சட்டமியற்றுபவர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து தீவிர வலதுசாரி இயக்கங்கள் சிலவற்றை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது கனடா அரசு.

அமெரிக்காவில் கடந்த மாதம் கேபிடல் கட்டிடத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் அந்த நிகழ்வின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரிகள் திடீரென கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். ஜோ பைடன் வெற்றி பெற்றதை எதிர்த்து அவர்கள் முழக்கமிட்டுக்கொண்டே போலீசாரை மீறி உள்ளே நுழைந்தனர்.அப்போது ஏற்பட்ட கலவரம் அமெரிக்க வரலாற்றிலேயே கருப்பு புள்ளியாக மாறியது. மேலும் இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு கனடாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஹீவிர வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கனடாவின் பொது பாதுகாப்பு மந்திரி பில் பிளேர், 13 தீவிர வலதுசாரி குழுக்களை மத்திய அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது என்றார். மேலும் சமீபத்திய வன்முறை நிகழ்வுகள் தீவிரவாத குழுக்களால் முன்வைக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல் பற்றி கனடா நாட்டினர் அதிகம் அறிந்து வைத்துள்ளனர். துரதிஷ்டவசமாக இந்த குழுக்கள் கனடா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் செயல்படுகிறது. அவர்களின் வன்முறை நடவடிக்கைகள் வெள்ளை மேலாதிக்கம், யூத எதிர்ப்பு, இனவாதம், ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் தவறான கருத்து ஆகியவற்றால் தூண்டப்படுகின்றன என்று பிளேயர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்தியல் ரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல்கள் கனடாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட குழுக்களுடன் தொடர்பு உடையவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் அந்த குழுக்களுடன் தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் நுழையவும் தடை விதிக்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கடந்த ஜனவரி மாதம் கனடா நாடாளுமன்றத்தில் அடையாள தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிரவுட் பாய்ஸ் எனப்படும் பிரபல குழுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குழு கனடா நாடினர் ஒருவரால் நிறுவப்பட்டது. மற்ற நாடுகளிலும் இந்த அமைப்பு தங்களை மேற்கத்திய ஆதிக்கவாத அமைப்பு என்றும் விவரித்துள்ளது.

தேசிய வக்கீல்கள் குழு அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இந்த வெள்ளை மேலாதிக்க குழுக்களை பட்டியலிட்டதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம் என குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பாரூக் தெரிவித்துள்ளார். வெள்ளை மேலாதிக்கத்தை அகற்ற நாங்கள் நாடுதழுவிய ஒருமித்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தோம். இந்த நாள் வரும் என்றும் நாங்கள் நம்பினோம். லிபரல்கள், மற்ற கட்சியினர் என அணைத்து தரப்பினரும் வெள்ளை மேலாதிக்கத்தை அகற்றும் இந்த நடவடிக்கையை ஆதரிப்பதால், பொது அறிவு மேலோங்கி இருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”என்று ஃபாரூக் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version