இந்தியா

வீடு வாங்குவதை விட வாடகைக்கு இருப்பதை விரும்பும் பெரும்பாலானோர்.. என்ன காரணம்?

Published

on

ரியல் எஸ்டேட் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக சொந்த வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு வாங்க அதிக நபர்கள் விருப்பத்துடன் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

குறிப்பாக மும்பையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 11% வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையில் 10 ஆயிரத்து 379 வீடுகள் பொதுமக்களால் வாங்கப்பட்ட நிலையில் 2023 பிப்ரவரில் 9269 வீடுகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது என்றும் இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்பது சதவீதம் குறைவு என்றும் கூறப்படுகிறது.

வீடுகள் வாங்குவதை விட வீடுகள் வாடகைக்கு எடுப்பதையே மக்கள் விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக சொந்த வீடு வாங்குவதற்கு வங்கியில் லோன் வாங்கினால் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்து வருவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது வீட்டுக்கு கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படுகிறது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கப்படுகிறது அல்லது மாதங்கள் அதிகரிக்கப்படுகிறது என்பதால் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக வாங்கிய வீட்டை விற்கும் போது அதன் மதிப்பு குறைவாக மதிப்பிடப்படுகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளின் மதிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது தாக ஒரு சொத்து வாங்குவதற்கு செலவு செய்யப்படும் தொகையின் வட்டி பொதுமக்களால் தற்போது கணக்கு பார்க்கப்படுகிறது. 40 லட்சம் கொடுத்து ஒரு வீட்டை வாங்கினால் 12 சதவிகித வட்டி போட்டால் கூட மாதம் 40 ஆயிரம் வட்டி கிடைக்கும். ஆனால் அந்த வீடு பத்தாயிரம் ரூபாய்க்கு கூட வாடகைக்கு போவது இல்லை என்ற நிலை இருப்பதால் வட்டி கணக்கு பார்க்கும் முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கடனின் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால் கடனை செலுத்துபவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்றும் பலர் கடனை செலுத்த முடியாமல் வீட்டை விற்க வேண்டிய நிலை வருவதாகவும் அதனால் தான் சொந்த வீடு வாங்குவதில் சுணக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு எடுப்பதில் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஒரு வீட்டை வாங்கி அதற்கு மாதமாதம் தவணை கட்ட வேண்டும் என்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது என்றும் ஒரு குறிப்பிட்ட தொகை வாடகையாக மட்டும் செலவழித்து விட்டு நிம்மதியாக இருந்து விடலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அடிக்கடி பணி மாறுபவர்கள் வாடகை வீட்டில் இருந்தால் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு மாறிக் கொள்ளலாம் என்றும் ஆனால் சொந்த வீட்டில் உள்ளவர்கள் பணியிடம் மாறினால் வேறு வழியின்றி அலுவலகத்திற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு பெரிய தொகை கொடுத்து வீட்டை வாங்குவதை விட அந்த தொகையை மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீட்டில் சேமித்தால் அதில் கிடைக்கும் வட்டியின் ஒரு சிறிய பகுதியை மட்டும் வாடகைக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மீண்டும் சேமிக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version