தமிழ்நாடு

நள்ளிரவு முதல் தொடங்கியது பஸ் ஸ்டிரைக்: பரிதாப நிலையில் பயணிகள்!

Published

on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவில் இயங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சென்னையை பொருத்தவரை அதிகாலையில் 200 பேருந்துகள் தினசரி இயங்கும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெறும் 80 பேருந்துகள் மட்டுமே இயங்கி உள்ளதாகவும் அதிமுக தொழிற்சங்க தொழிலாளர்களை வைத்து இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள பணிமனையில் இருந்து மிக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் கோவை கோட்டத்தில் மட்டும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களின் உதவியால் 50 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே ஓடுவதால் பொதுமக்கள் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேருந்து நிறுத்தத்தை கணக்கில்கொண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்கள் அதிக அளவில் கட்டணங்களை வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது இதனால் பயணிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பயணிகள் நிலை பரிதாபமாக இருக்கும் நிலையில் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version