இந்தியா

பட்ஜெட் 2021: ‘இதுவரை பார்த்திடாத வகையிலான பட்ஜெட்டா?’- என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, ‘இதுவரை பார்த்திடாக வகையிலான பட்ஜெட்டாக’ இருக்குமா? அல்லது, எப்போதும் வருடா வருடம் தாக்கல் செய்வது போல சாதாரண பட்ஜெட்டாக இருக்குமா என்பது தான் மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது.

முன்னெப்போதும் ஏற்படாத வகையிலான பெருந்தொற்று நோய், விவசாயிகள் பிரச்சனை, அண்டை நாடுகளுடன் உரசல் போக்கு உள்ளிட்ட பல்வேறு சவால்களை சமாளிக்கும் அளவுக்கு இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகுமா என்கிற எதிர்பார்க்கு எகிறியுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் பொது சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் அதிகரித்துக் கொண்டே போகும் கடன் சுமையை சமாளிக்க சில முக்கியமான மற்றும் கடினமாக முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சர் நிர்மலா அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியப் பொருளாதாரம் என்பது கொரோனா தொற்றுக்கு முன்னரே தள்ளாடிய நிலையில் தான் இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம், கொரோனா தொற்றுக்கு முன்னரே சரிவை சந்தித்திருந்தது. கொரோனா, அதை இன்னும் மோசமாக்கியது. எனவே அடிப்படை பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றன பல்வேறு துறைகள்.

இன்றைய பட்ஜெட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசு, சாதாரண குடிமக்கள் கைகளில் அதிக பணம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை அறிவிக்கலாம். அப்படிச் செய்வதன் மூலம் பொருளாதாரம் மொத்தமாக முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன. உட்கட்டமைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்டவைகளில் அதிக முதலீடுகளை எதிர்பார்க்கலாம்.

கொரோனா தொற்று காலத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலா துறை மற்றும் வாகன உற்பத்தித் துறைகளுக்கு சலுகைகள் கூடிய அறிவிப்புகள் வரலாம்.

மிக முக்கியமாக, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கான திட்டமும், அதற்கான நிதி ஒதுக்கீடும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். எந்த அளவுக்கு மத்திய அரசு, தடுப்பூசிக்கு நிதி ஒதுக்குகிறது என்பதை வைத்து, எத்தனைப் பேருக்கு அது கிடைக்கும் என்று கணிக்க முடியும்.

seithichurul

Trending

Exit mobile version