இந்தியா

பட்ஜெட் 2021: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன் உள்ள சவால்கள்!

Published

on

உலகையே ஆட்டிப்படைத்த கோவிட்-19 தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் நாளை, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட், ‘இதுவரை இல்லாத வகையில் இருக்கும்’ என்று சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் அது குறித்தான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு வரும் பொருளாதாரத்துக்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி, 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதேபோல 2019- 2020 நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி என்பது 11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெறும் 4.2 சதவீதத்தையே தொட்டது. இப்படி பல்வேறு இடர்பாடுகளைக் கணக்கில் கொள்ளும் போது, 2021 பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

2021 பட்ஜெட்டில் அரசுக்கு இருக்கும் சவால்கள்:

1.சுகாதாரத் துறை

கொரோனா தொற்று மூலம், நாட்டின் பொது சுகாதார அமைப்பு வலுவாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் தேசிய அளவிலான சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2.வங்கித் துறை

மொத்த வங்கித் துறையும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுத் துறை வங்கிகளுக்கு அதிரடி சீர்திருத்தங்கள் உடனடியாக தேவைப்படுகின்றன.

3.தேவையை மீண்டும் ஊக்குவித்தல்:

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மக்கள் கூடும் இடங்களில் தேவைப்பட்ட பொருட் தேவை என்பது வெகுவாக குறைந்துள்ளது. அது சார்ந்த பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் கட்டுமானப் பணிகள், சுற்றுலா துறை, சேவைத் துறை உள்ளிட்டவை கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன. இதனால் மீண்டும் நாட்டில் தேவையை ஊக்குவிப்பது முக்கியமாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

4.சமநிலை உள்ள பட்ஜெட்:

மத்திய அரசு, வாங்கும் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி வருவாயைத் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. வரி வருவாயை சரிகட்ட, மாநில அரசுகளை கடன் வாங்க ஊக்குவிக்கிறது மத்திய அரசு. இதனால் அந்தக் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. இப்படி கடன் பெருதல் அதிகமாவதை கருத்தில் கொண்டு, சமநிலை கொண்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version