உலகம்

தந்தையால் சிறைவைக்கப்பட்ட துபாய் ஆட்சியாளரின் மகள்? ஆதாரங்களை கேட்கும் பிரிட்டன்.. என்ன நடக்கிறது?

Published

on

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திஃபா தான் பணயக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது என்றும் கூறியிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஷீகா லத்திஃபா சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக துபாயில் இருந்து தப்பி சென்றதாக சொல்லப்பட்டது. லத்திஃபாவும் அவருடைய தோழியும் தப்பித்து சென்றபொழுது அவர்கள் சென்ற கப்பல் இந்திய கடல்பகுதியில் வைத்து சிக்கியதாகவும் அதை தொடர்ந்து அவருடைய தந்தையின் ஆட்கள் லத்திஃபாவை மீண்டும் துபாய்க்கு கொண்டு சென்றனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இது லத்திஃபா தப்பிக்க முயற்சி செய்வது இரண்டாவது முறையாகும். அப்போது லத்திஃபாவை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்க இந்திய அரசாங்கம் அதற்கு கைமாறாக கிறிஸ்டியன் மிஷேலை தங்களிடம் ஒப்படைக்க கோரியதாக ஒரு தகவல் வெளியானதும் தனிக்கதை.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் முகமது, ஜோர்டான் நாட்டு இளவரிசியான ஹேயா பின் அல் ஹுசைனை ஆறாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார். ஹேயாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளான ஷம்சா அல் மக்தூம் ஏற்கனவே ஒருமுறை தப்பிக்க முயற்சி செய்து பின்னர் தன்னுடைய தந்தையின் ஆட்களிடம் சிக்கி அதன் பின்னர் அவர் வெளியுலகிற்கு கட்டப்படாமலேயே இருந்து வருகிறார்.

Also Read: இனி இந்தியா வராமலே புதுப்பிக்கலாம்.. அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வந்த நற்செய்தி

அதை தொடர்ந்து தான் இரண்டாவது மகளான லதீஃபா இரண்டு முறை தப்பிக்க முயன்று தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தான் உலகம் முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதன்படி, தன்னுடைய குடும்பத்தினர் அதிகமாக சித்திரவதைகளுக்கு உள்ளாவதாகவும், வெளிநாடுகளில் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்வதால் சுதந்திரமான வாழ்க்கையை வாழவே தப்பித்து சென்றதாக லதீஃபா கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு வட்டாரங்கள் இதை மறுத்துள்ளன. மேலும் அந்த சமயங்களில் லதீஃபா விவகாரம் குறித்து விசாரிக்க நேரில் சென்ற முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன், லதீஃபாவை நல்ல முறையில் நடத்தப்படுவதாகவும், அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதால் அதற்கான மருத்துவங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இதுவும் கூட சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீடியோ ஆதாரம்

இதற்கிடையே அந்த நிகழ்வுக்கு பிறகு லதீஃபாவை வேறு எந்த பொது நிகழ்விலும் யாரும் பார்க்கவும் இல்லை. இதுதொடர்பாக புலனாய்வு செய்து தற்போது புதிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பிபிசி. அதில் லதீஃபா ஒரு குளியலறையின் மூலையில் ஒளிந்துகொண்டு பேசுகிறார்.

நான் ஒரு பணயக்கைதியாக இங்கே இருக்கிறேன், இந்த வீடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் லதீஃபா அந்த செல்போன் வீடியோவில் பேசுகிறார். வீட்டிற்கு வெளியே ஐந்து ஆண் காவலர்களும், வீட்டிற்கு உள்ளே இரண்டு பெண் காவலர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு வீடியோவில் எனது நிலைமை ஒவ்வொரு நாளும் மிகவும் அவநம்பிக்கையாகவே இருக்கிறது. இந்த சிறை வீட்டில் நான் பணயக்கைதியாக இருக்க விரும்பவில்லை. சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என்றும் லதீஃபா கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது லதீஃபா நண்பர்கள் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துபாய் அரசு வட்டாரங்கள் இதுதொடர்பாக கருத்து கூற மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதற்கிடையே லதீஃபா உயிருடனும், நல்ல நிலையில் இருப்பதற்கான சரியான ஆதாரங்களை பார்க்க விரும்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. ஏனெனில் லதீஃபாவின் தாயும், பிரதமர் ஷேக் முகமதுவின் முன்னாள் மனைவியுமான ஹேயா கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து லண்டன் சென்று தன்னுடைய சிறுவயது குழந்தைகளை சவூதி மன்னர் குடும்பத்தினருக்கு திருமணம் செய்து வைக்க முயல்வதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் லதீஃபாவின் சகோதரி லண்டனில் வைத்து கடத்தப்பட்டதால் இந்த விவகாரத்தில் பிரிட்டன் அதிகளவில் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version