உலகம்

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. விளையாட்டு வீரர்கள் இரங்கல்!

Published

on

உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் பீலே சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டது. மறைந்த கால்பந்து வீரர் பீலேவுக்கு வயது 82.

கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் அவ்வப்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக அவர் உடல் பலவீனமாக இருந்த நிலையில் பிரேசில் நாட்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை சீரற்ற முறையில் இருந்ததாக கூறப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்த நிலையில் அவரது இதயம் மற்றும் சிறுநீரகம் பெருமளவில் பாதிப்பு அடைந்ததாகவும் அதனால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூன்று முறை உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவு உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர் பீலே என்பதும் உலக கோப்பைகளில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற கின்னஸ் புத்தகத்தில் அவரது பெயர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 16 வயதில் பிரேசில் அணிக்காக ஆடத் தொடங்கிய அவர் 1971ஆண்டு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version