தமிழ்நாடு

”சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு”- மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு

Published

on

வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சர் திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் மீது ஆதாரங்களுடன், 22.12.2020 அன்று, நேரில் கொடுக்கப்பட்ட 97 பக்க ஊழல் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்; 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் இதுவரை விடுதலை செய்யாமல், அமைச்சரவைத் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டிருக்கும் தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து, மக்கள் விரோத அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது.

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டும் வெற்று விளம்பரக் கொண்டாட்டமாக மாறிவிட்டது. புதிய முதலீடுகளும் இல்லை – புதிய தொழிற்சாலைகளும் இல்லை – புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை! அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை வடிகட்டிய ஊழல்! வரலாறு காணாத ஊழல்! அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பது, தமிழகத்தின் கெட்ட வாய்ப்பாகப் போய்விட்டது.

அ.தி.மு.க. அமைச்சரவையில் ஊழலின் மூலம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பும், கொள்ளையடித்த பணமும், தமிழகத்திற்கே தனி பட்ஜெட் ஒன்றைத் தயாரிக்கும் அளவிற்கு மலை போல் குவிந்து – சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஊழல் ஆட்சி இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை – ஏன், 1991 – 1996 அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களையே விஞ்சி நிற்கிறது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தற்போதைய ஊழல்கள்.

பதவியில் ஒட்டிக்கொண்டு, பவிசு காட்ட வேண்டும், பதவியை முறைகேடாகப் பயன்படுத்திப் பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலத்திற்காக, மாநில உரிமைகளைத் தாராளமாகத் தாரைவார்த்து, ஜி.எஸ்.டி. சட்டத்தை அவசர கதியில் அமல்படுத்தி, 15-ஆவது நிதி ஆணையத்தில் உரிய நிதியைப் பெறாமல் கோட்டை விட்டு – மாநிலத்தின் நிதி உரிமையையும் பறிகொடுத்தது இந்த ஆட்சி.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தாலும், டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு நடந்தாலும், இந்தி திணிக்கப்பட்டாலும் “எங்களுக்கு என்ன கவலை” என்று ஊழலில் ஊறிப்போன அரசு இது.

புதிய ரயில்வே திட்டங்களையோ, முன்னேற்றத்திற்கான வேறு முக்கிய திட்டங்களையோ கொண்டு வரமுடியாமல் – அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டியதோடு மறந்துவிட்டு ஒரு கையாலாகாத ஆட்சியை நடத்தி வரும் – கூவத்தூரில் ஊர்ந்து முதலமைச்சரான திரு. பழனிசாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதுதான் தமிழக மக்களின் ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

“ஊழல் செய்வோருக்கே இந்த ஆட்சி” என்ற வகையில் லோக் ஆயுக்தா – உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’ அமைப்பு எல்லாம் முடக்கப்பட்டு – விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை – எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் – ஜனநாயக மாண்புகளுக்கும் – அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆளுநர் உரைக்கான இந்தக் கூட்டத் தொடரை திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று விரிவாக விளக்கிக் கூறியுள்ளார் ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version