இந்தியா

இது குமாரசாமி இல்லை கமல்நாத்: குதிரை பேரம் நடத்தனும்ன பாஜக ஏழு பிறவி எடுக்கனும்!

Published

on

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது போல மத்திய பிரதேசத்திலும் பாஜக தனது ஆட்டத்தை ஆட உள்ளது. கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்யவைத்ததாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரத்தில் கலைத்துவிடலாம், தலைமையின் சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என பாஜக தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார். இது தேசிய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவரின் இந்த கருத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இங்கு விற்பனைக்கு கிடையாது, எப்போது பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரினாலும் அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். 231 எம்எல்ஏக்களை கொண்ட மாநில சட்டசபையில் 121 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கமல்நாத் கூறியுள்ளார்.

இதனையடுத்து அம்மாநில அமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான ஜிது பட்வாரி பாஜகவுக்கு எதிராக அளித்துள்ள பேட்டியில், எங்களுக்கு பிரச்சனையை உருவாக்கு பாஜக எல்லாவற்றையும் செய்துவிட்டது. ஆனால் இது குமாரசாமி அரசு இல்லை, கமல் நாத் அரசு. இந்த அரசை கலைக்க குதிரை பேரம் நடத்த வேண்டுமானால் அவர்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும் என்றார் ஆவேசமாக.

அதே நேரத்தில் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங் சௌகான் கூறியபோது, இந்த அரசு கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் காரணமில்லை, காங்கிரஸ் தலைவர்கள் தான் அவர்கள் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருப்பார்கள். காங்கிரஸ்ஸில் உள்கட்சி பிரச்சனைகள் உள்ளது மற்றும் பிஎஸ்பி, எஸ்பி கூட்டணியிலும் பிரச்சனை உள்ளது. இதனால் எதாவது நடந்துவிட்டால் அதற்கு நாங்கள் ஒன்னும் செய்யமுடியாது என்றார்.

Trending

Exit mobile version