உலகம்

சீன அரசு அவர எதுவும் செய்யல போல..!?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; மீண்டும் தோன்றிய Jack Ma

Published

on

உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, சில மாதங்களாக பொதுத் தளங்களில் தோன்றவில்லை. டெக் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, உலக கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். அவரின் அலிபாபா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருகிறது. இந்த அசுர வளர்ச்சி, சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு ஆபத்தாக முடியலாம் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக சீனப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கும் சக்தியாக ஜாக் மா உருவெடுத்து விட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதனால் அவரது நிறுவனத்துக்கு எதிராக கறார் நடவடிக்கைகளை எடுத்தது சீன அரசு. மேலும், அவர் பல்வேறு நிறுவனங்களில் செய்த முதலீடுகளையும் நோண்ட ஆரம்பித்தது சீனா.

இதைத் தொடர்ந்து அவர் சீனாவால் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரின் கதையை சீன அரசு, சத்தமில்லாமல் முடித்துவிட்டது என்று கூட தகவல்கள் வந்தன. பொதுவாக சீனாவிலிருந்து பெரும் செல்வந்தர்களாக உருவெடுக்கும் நபர்கள், அரசுக்குத் தெரியாமல் எதாவது மோசடியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் யாருக்கும் தெரியாமல் அமுக்கப்படுவார்கள். அப்படி குற்றங்களில் ஈடுபட்டு பலிகடா ஆனவர்கள் அனேகம் பேர். அதைப் போலவே ஜாக் மாவும் ஒடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆருடம் சொல்லப்பட்டது.

இப்படியான சூழலில் அவர் மீண்டும் பொதுத் தளத்தில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்று காலை ஜாக் மா, சீனாவில் இருக்கும் 100 கிராமப்புற ஆசிரியர்கள் மத்தியில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற ஆசிரியர்களுடன் ஜாக் மா இப்படி உரையாடுவது வழக்கம் தானாம். இந்த முறை கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அச்சம் இருப்பதால், காணொலி வாயிலாக பேசி உள்ளதாகவும் அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

இப்படி ஜாக் மா, பொதுத் தளத்தில் தோன்றியிருந்தாலும், அவருக்கும் சீன அரசுக்கும் இடையில் உள்ள பிரச்சனை சரியானதா என்று தெரியவில்லை. அது குறித்து தொடர்ச்சியாக அதிர்ச்சிகர தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஜாக் மா, ஆசிரியர்களுடன் பேசிய காணொலி இதோ:

Trending

Exit mobile version