சினிமா செய்திகள்

நேருக்கு நேர் மோதும் நாசர் மற்றும் பாக்கியராஜ்: பரபரப்பில் நடிகர் சங்கத் தேர்தல்!

Published

on

விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது.

கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால் அணி வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மூலம் ஒரு தலைவர், இரண்டு உப தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் விஷால் அணி சார்பில், நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும் ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில் அதே பதவிக்கு விஷாலுக்கு எதிராக புதிய அணி சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்க உள்ளார். தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். நாசர் மற்றும் பாக்கியராஜுக்கு உறுப்பினர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதால் இருவரும் தற்போது நேருக்கு நேர் மோதுவது நடிகர் சங்கத் தேர்தலில் பரபரப்பை கூட்டியுள்ளது.

வரும் 23-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version