இந்தியா

ரூ.20 கோடிக்கு நாய் வாங்கிய தொழிலதிபர்.. ஏசி அறையில் வைத்து வளர்க்க திட்டம்!

Published

on

பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணக்காரர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதும் குறிப்பாக லட்சக்கணக்கில் நாய்க்குட்டியை வாங்கி வளர்ப்பது அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு ஒன்றரை வயது நாயை வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலதிபர் வீட்டு விலங்குகளை வளர்ப்பது அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி அவர் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் காகேஷியன் ஷெப்பர்டு என்ற உயர் ரக நாய் ஒன்றை அவர் 20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ஒன்றரை வயது உடைய அந்த நாய்க்கு கடபோம் ஹைடர் என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நாய்க்கு அவரது வீட்டில் ஒரு தனி அறையை ஒதுக்கிக் இருப்பதாகவும் அந்த அறையில் ஏசி உள்ளிட்ட வசதியையும் அவர் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

காகெஷியன் ஷெப்பர்டு என்ற வகை நாய் துருக்கி, ஜார்ஜியா,அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளில் மட்டும்தான் காணப்படும் என்றும் இந்தியாவில் மிக அரிதாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 10 முதல் 12 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழக் கூடிய இந்த நாய்க்கு 20 கோடி ரூபாய் செலவழித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வகை நாயை திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் பார்த்ததாகவும் அந்தக் கண்காட்சியில் இந்த நாய் 32 பதக்கங்களை வென்றது என்றும், எனவே அந்த நாயை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு ஏற்பட்டதாகவும் சதீஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே பல நாய்களை வளர்த்து வந்தாலும் இந்த நாள் மிகவும் சிறப்பானது என்றும் எனவே தான் அதை 20 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாயை அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெற இருக்கும் நாய் கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 76 சென்டிமீட்டர் உயரம் மற்றும் 45 முதல் 75 கிலோ வரை எடை கொண்டதாக வளரக்கூடிய இந்த நாய் பார்த்தாலே பயமுறுத்தும் வகையில் மிரட்சியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version