இந்தியா

சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு அபராதம் விதித்த போலீஸ்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்!

Published

on

நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததாகவும் அபராதம் விதித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த கார்த்திக் பத்ரி என்பவர் தனது மனைவியுடன் உறவினரின் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் தங்கள் வீடு இருக்கும் அபார்ட்மெண்டின் நுழைவு வாயிலில் சில மீட்டர் தொலைவில் இருக்கும் போது இரண்டு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டைகளை காட்டச் சொன்னார்கள்.

பின்னர் தம்பதிகள் தங்கள் தொலைபேசியில் இருந்த ஆதார் அட்டை புகைப்படங்களை அவரிடம் காண்பித்து போலீசார் அவர்களை விடவில்லை. அவர்களது தொலைபேசியை எடுத்து கொண்டு அவர்களது உறவினர்கள், வேலை செய்யுமிடம், பெற்றோர் உள்ளிட்ட விவரங்களை கேட்க தொடங்கினார்கள்.

மேலும் போலீசார் ஒரு நோட் புக்கை எடுத்து தம்பதிகளின் பெயர் மற்றும் ஆதார் எண்களையும் எழுதத் தொடங்கினார்கள். இதற்கு அந்த தம்பதியினர் எதிர்ப்பு தெரிவித்த போது இரவு 11 மணிக்கு மேல் சாலையில் நடப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர்களிடம் கூறிய போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் 3,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களை விடுவிக்குமாறு காவல்துறையினர்களிடம் அந்த தம்பதிகள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் அவர்கள் மனம் இரங்காமல் ஒருசில குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டி பணம் செலுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பத்ரி மற்றும் அவரது மனைவி கண்ணீருடன் தங்களை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அதன் பிறகு கடைசியாக ஆயிரம் ரூபாய் கொடுக்க முன்வந்தனர். அதனை பேடிஎம் க்யூ ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்துவதாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ₹3000 பிடிவாதமாக கேட்டனர். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்கு பதிவு செய்ய போவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் பத்ரி பதிவு செய்துள்ளார். சட்டத்தை முறையாக நம்பும் நாங்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து விட்டோம் என்றும் இந்த மண்ணில் நேர்மையாக வாழும் ஒரு குடிமக்களுக்கு இப்படித்தான் அனுபவம் ஏற்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் உண்மையான போலீசார்களா? அல்லது போலீசார் வேடத்தில் இருந்த திருடர்களா என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப் படுவார்கள் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இரவு 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடக்க தடை செய்யும் எந்த விதியும் இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் தம்பதிகளை மிரட்டிய இரண்டு கான்ஸ்டபிள்கள் அடையாளம் காணப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version