இந்தியா

மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்: நீதிமன்றத்தை நாடிய உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்!

Published

on

தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வரும் தமிழ் ராக்கார்ஸ் இணையதளம் பிரதமர் மோடி பங்கேற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியை தங்களது இணையத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க தமிழ் திரையுலகினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அது குதிரை கொம்பாகவே உள்ளது. மிகப்பெரிய செலவில் எடக்கப்படும் படங்களை அன்றைய தினமே தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என எதையும் விட்டுவைக்காமல் அட்டகாசம் செய்து வரும் தமிழ் ராக்கார்ஸ், தற்போது பிரதமர் மோடி, நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக இடம்பெற்ற மேன் Vs வைல்டு நிகழ்ச்சியையும் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு ஹாலிவுட்டிலிருந்தும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட் படங்களை தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்ததுள்ளது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அனுமதியின்றி வெளியிடுவதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து படங்களைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version