தமிழ்நாடு

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏன்? முழு விவரம் இங்கே

Published

on

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன. இதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

இந்தச் சூழலில் தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு, இந்த நோய்த்தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில், 31-12-2020 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இதுவன்றி, 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 31-12-2020 அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த்தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த்தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய்த்தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதுபோன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும், 31-12-2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31-12-2020 மற்றும் 1-1-2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அ.தி.மு.க. அரசு எடுத்துவரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version