தமிழ்நாடு

அத்தி வரதர் முன்பு குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி: மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

Published

on

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்தி வரதரை பார்க்க குடியரசுத்தலைவர், முதல்வர் என பல முக்கியமானவர்கள் வந்து சந்தித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எழுந்து நின்று காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் கடல் அலையென மோதுகிறது. அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தநிலையில் இன்று கர்ப்பிணிகளுக்கான சிறப்பு வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வந்த விஜய என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலி ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து உடனடியாக கோயில் அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர், செவிலியர் உதவியுடன் அப்பெண்ணுக்குப் பிரசவம் நடைபெற்றது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அத்தி வரதரை தரிசித்து வெளியே வந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தை பிறந்தது அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version