விமர்சனம்

விமர்சனம்: ஜில்லா பாதி ரமணா மீதி.. அயோக்யா ரெடி!

Published

on

விஜய்யின் ஜில்லா படத்தை போல கெட்ட போலீஸாக இருக்கும் விஷால், ஒரு இளம் பெண்ணின் பாலியல் வழக்கு காரணமாக நல்ல போலீசாக மட்டும் இல்லை ரமணா விஜயகாந்தாகவும் மாறி தியாகம் செய்வதே அயோக்யா படத்தின் கதை.

கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் இரும்புத்திரை மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. அதில், இரும்புத்திரை நல்ல வெற்றியை பெற்றது. அதே போல விஷால் நடிப்பில் இன்று வெளியான அயோக்யா படமும் விஷாலுக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக் படம் தான்.

விஷால் இந்த படத்தில் மாஸ் மற்றும் ஃபுல் எனர்ஜியுடன் நடித்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி கிளைமாக்ஸ் காட்சி வரை விஷாலின் நடிப்பு அற்புதம்.

விஷால் மட்டுமின்றி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையை நகர்த்தி செல்கின்றனர்.

தெலுங்கில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்த ரோலில் பார்த்திபன் நடித்துள்ளார். அவரது காட்சிகள் நானும் ரவுடி தான் படத்தை நினைவுப் படுத்துவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

நாயகி ராஷி கண்ணா வெறும் அழகு பதுமையாக மட்டும் வராமல், நாயகனை மாற்றும் ஒரு கருவியாகவும், கதையை சரியான பாதைக்குத் திருப்பும் கேரக்டரிலும் நடித்து அசத்துகிறார்.

நேர்மையான கான்ஸ்டபிளாக வரும் கே.எஸ். ரவிக்குமாரின் நடிப்பு அற்புதம். கெட்டவனாக இருக்கும் நாயகன் விஷாலை பார்த்து அவ்வப்போது அவர் நாக்கைப் பிடுங்கும் அளவிற்கு கேள்விகளை அல்ல பார்வைகளை பார்த்தே கொல்வது அவர் சீனியர் இயக்குநர் என்பதால் அது அசால்ட்டாக அமைந்து விடுகிறது.

யோகி பாபு இரண்டு சீனில் வந்தாலும், அவரது காமெடி பன்ச் நச்சென்று இருக்கிறது.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொடூரர்களுக்கு உடனடியாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட விதத்தில் சில பல குறைகளும் மறைந்து கைதட்டல்களை பெறுகிறது.

ஆனால், உண்மையில், இதுபோன்ற தீர்ப்புகள் நீதிபதிகள் வழங்குவார்களா? என்பது சந்தேகம் தான்.

திருடர்களை விட பெரிய திருடர்கள் போலீஸ்காரர்கள் என சொல்லும் இடம் போலீஸ்காரர்களுக்கான சவுக்கடியாக விழுகிறது.

சாம் சி.எஸ். இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அத்தனையும் தெலுங்கு பட ஸ்டைலில் வருவது மிகப்பெரிய ஏமாற்றம். அனிருத் குரலில் வரும் காதல் பாடலும் நானும் ரவுடிதான் பாடலை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அயோக்யனாக இருக்கும் வரை நல்லா இருக்கும் விஷால், யோக்யனாக மாறும் போது அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவது வாழ்வின் நிதர்சனத்தை சொல்கிறது.

சினி ரேட்டிங்: 3.5/5.

seithichurul

Trending

Exit mobile version