கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்டில் இந்தியா படுதோல்வி!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்து வந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்நிலையில் 43 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஷமி 6 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும் எடுத்தனர். இதனையடுத்து இந்திய அணிக்கு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

அணி ரன் எண்ணிக்கையை ஆரம்பிக்கும் முன்னரே ராகுல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து புஜாரா, விராட் கோலி, முரளி விஜய், ரகானே விகாரி, ரிஷப் பண்ட் என வரிசையாக அனைத்து வீரர்களும் நடையைகட்டினர். இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் தலா மூன்று விக்கெட்டும், ஹசில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது நாதன் லயனுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version