கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. 82 ரன் எடுத்த ஃபின்ச் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் பொறுப்பாக ஆடிவந்தார்.

டேவிட் வார்னர் 107 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்ற அனைவரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடததால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர் பந்துவீச்சில் மிரட்டினார். 10 ஓவர்கள் வீசிய ஆமீர் 30 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஃபகர் சமான் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் பாகிஸ்தான் அணியால் வலுவான ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

முகமது ஹஃபீஸ் 46 ரன்னும், சர்ஃபரஸ் அகமது 40 ரன்னும் பின்வருசையில் இறங்கிய வஹாப் ரியாஸ் 45 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் மற்றும் ரிச்சார்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இன்றைய போட்டி: இந்தியா Vs நியூசிலாந்து
இடம்: டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம்
நேரம்: மாலை 3 மணி

Trending

Exit mobile version