கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இங்கிலாந்து: அரையிறுதி வாய்ப்பு சந்தேகம் தான்!

Published

on

உலகக் கோப்பை லீக் போட்டியின் 32 வது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் ஃபின்ச் சிறப்பாக விளையாடி 100 ரன்கள் அடித்தார். டேவிட் வார்னர் 53 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. அணி ரன் எதுவும் எடுக்காமலேயே தொடக்க ஆட்டக்காரர் வின்ஸ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி ஓரளவு நெருக்கடியில் இருந்து மீள ஆரம்பித்தது.

ஆனால் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைக்காததால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 221 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரெண்டொர்ஃப் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதம் அடித்த ஃபின்ச் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. மேலும் இங்கிலாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்று கடினமாகியுள்ளது.

இன்ற்றைய போட்டி: நியூசிலாந்து Vs பாகிஸ்தான்
நேரம்: மாலை 3 மணி
இடம்: பிர்மிங்ஹாம்

seithichurul

Trending

Exit mobile version